‘மாஸ்டர்’ படத்தில் தனது கதாபாத்திரத்தை முன்வைத்துச் செய்யப்பட்ட கிண்டலுக்கு சாந்தனு பதிலடி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது ‘மாஸ்டர்’.

இந்தப் படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்திருந்தார். ஆனால், படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே கலந்துகொண்டார். ‘மாஸ்டர்’ வெளியான உடனே பலருமே சாந்தனுவைக் கிண்டல் செய்தனர். ஆனால், எதற்குமே சாந்தனு பதிலளிக்கவில்லை.

சமீபத்தில் 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல் 2020-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும்போது, ‘மாஸ்டர்’ படத்துக்காக சாந்தனுவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று மீண்டும் சாந்தனுவைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.

இந்தக் கிண்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ஒருவர் இன்னொருவரைக் கிண்டல் செய்வதன் மூலமாகக் கிடைக்கும் அற்பமான சந்தோஷம். இந்தக் கிண்டல் எனக்குச் சோர்வைத் தந்துவிட்டது. ஆனால், என் மீது தெரிந்தோ தெரியாமலோ வீசப்படும் அத்தனை கற்களுக்கும் நன்றி. அது இந்த அண்டத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லும்.

ஏனென்றால் நீங்களே சொல்லிவிட்டீர்களே, நடக்காமல் போய்விடுமா. இது ஒரு நாள் நடக்கும், என் சிரிப்பு மட்டுமே அப்போது என் பதிலாக இருக்கும்.

அன்புடன், பார்கவ்”.

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.