முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் மெரினாவில் பலர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அங்கு ‘ட்ரோன்’ மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரோனா ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள காலை 6 முதல் 9 மணிவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மெரினா கடற்கரை பகுதிகளில் அதிகமானோர் நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசத்தை சரியாக அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, இணை ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் பகலவன் மேற்பார்வையில் திருவல்லிக்கேணி உதவி ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர், ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்டோர் நேற்று காலை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களை சந்தித்து தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடித்து கரோனா தொற்றை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளையும் போலீஸார் வெளியிட்டனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். மேலும் கடற்கரை பகுதியில் யாரேனும் கரோனா விதிமுறைகளை மீறி நடந்து கொள்கிறார்களா? என ‘ட்ரோன்’ மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.