முதல்வராக பதவி ஏற்றப்பின் முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்துக்கு முதல் கையெழுத்தை போடப்போகிறார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.

திமுக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றபோது முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக விவசாயக்கடன் ரத்து, கூட்டுறவு நகைக்கடன் ரத்து என்ற கோப்பில் போடுவதாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

அதேபோல் தேர்தல் அறிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4000 கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இது தவிர இல்லத்தரசிகளுக்கு மாதந்தோரும் உதவித் தொகை, நூறு நாளில் மக்கள் குறை தீர்க்கும் திட்டம் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கோட்டையில் தனது அறைக்குச் சென்று முதல்வராக கோப்பில் முதல் கையெழுத்தாக எந்த திட்டத்துக்கு போடுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முதல் கையெழுத்தாக இலவச மின்சாரம் திட்டத்தை கருணாநிதி கோப்பில் கையெழுத்திட்டதும், 500 டாஸ்மாக் கடைகளை மூடும் திட்டத்தில் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்டாலின் முதல் கையெழுத்தாக கருணாநிதி பிறந்த நாளில் மக்களுக்கு 4000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான கையெழுத்தை போடுவார் என தெரிகிறது.