டாஸ்மாக் கடைகளில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் ரூ.855 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் வார நாட்களில் ரூ.90 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். வார இறுதி நாட்களில் இந்த விற்பனை 2 மடங்கு அதிகரிப்பது வழக்கம்.

தற்போது தமிழகம் முழுவதும்கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் 2 வார ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மது விற்பனை நடந்தது. ஊரடங்குக்குமுதல்நாளான நேற்று முன்தினம்காலை 8 மணி முதலே மதுஅருந்துவோர் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று 2 வாரத்துக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

இதனால், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில், மண்டல அளவில் அதிகபட்சமாக சென்னையில் ரூ.98.96 கோடி, மதுரையில் ரூ.97.62கோடி, திருச்சியில் ரூ.87.65 கோடி,சேலத்தில் ரூ.76.57 கோடி, கோவையில் ரூ.67.89 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் கடந்த சனிக்கிழமை ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இதன்மூலம், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய2 நாட்களில் ரூ.854.91 கோடிக்குமதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.