புதுடெல்லி :  காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது என்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்திடம் தமிழக அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியுள்ளது. கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கடந்த 12ம் தேதி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ‘மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது’ என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   

மேலும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவுத்தலைவர் பால் கனகராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தனர்.

அதிமுக சார்பில் கலந்துகொள்ளும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று காலை டெல்லி வந்தனர். இந்த குழு இன்று மதியம் 1 மணியளவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, ‘மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு  உத்தேசித்துள்ள திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைக் கட்சிகள் குழு வலியுறுத்தியது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை வழங்கியதோடு, அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

#NEWSUPDATES #METROPEOPLE #MeghaDaduDam