சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.35 லட்சம் கொண்டுவந்த ஆந்திர இளைஞர் கைது செய்யப்பட்டார். ஒரு வாரத்தில் இது 2-வது சம்பவம் ஆகும்.

ஆந்திரா, கேரளாவிலிருந்து ஹவாலா பணம் தமிழகத்துக்குக் கடத்தப்படுவது வாடிக்கையாக நடக்கும். இதற்காக சாதாரண இளைஞர்களைப் பயன்படுத்துகிறார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டுக் கடத்திவரும் இளைஞர்கள் போலீஸாரிடம் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.

ஊரடங்கு காரணமாக ரயில் மூலம் போதைப்பொருட்கள், கஞ்சா, போதை பவுடர், மதுபாட்டில்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. இதை ரயில்வே போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து சந்தேகப்படும் நபர்களைப் பிடித்து சோதனை நடத்துகின்றனர். அதில் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கடத்தி வரும் இளைஞர்களும் சிக்குகின்றனர்.

இன்று காலை ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் ஒன்று வந்தது. அப்போது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சிவநேசன் தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அந்த ரயிலில் இருந்து எஸ் 10 பெட்டியில் இருந்து வந்து இறங்கிய பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டதால், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் அவரைப் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் கொண்டுவந்த பையை சோதனை செய்தனர்.

அவர் கொண்டு வந்த பைக்குள் பேப்பரால் சுற்றப்பட்ட பெரிய பண்டல் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பணத்தை வெளியில் எடுத்து எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ. 35 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது தெரிந்தது. உடனடியாக அந்த இளைஞரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மஞ்சுமர்த்தி சுப்பாராவ் (28) எனத் தெரியவந்தது.

பணம் என்ன காரணத்திற்காகக் கொண்டுவரப்பட்டது, 35,30,000 ரூபாய்க்கு ஏதாவது வருமான ஆதாரம், ஆவணம் இருக்கிறதா? என போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணம் இல்லாத பணம் ரூ.35.30 லட்சத்தை வருமான வரித்துறையிடம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுபோன்று பணம் பிடிபடுவது இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. ஏற்கெனவே கடந்த 1ஆம் தேதி இதே சிறப்பு ரயிலில் குண்டூரில் இருந்து வந்த சந்திரசேகர் என்பவர் வயிற்றைச் சுற்றி கட்டுக்கட்டாக வைத்திருந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள பணத்துடன் சிக்கினார்.

ஒரே ஊர், ஒரே மாநிலத்திலிருந்து ஒரே ரயில் மூலம் வந்த 2 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.