நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே மும்பை, கொல்கத்தா, சென்னையில் ஆங்கிலேய அரசு நீதிமன்றங்களை நிறுவியது. சென்னை உயர் நீதிமன்றம், 1862 ஜூன் 26-ம் தேதி, சென்னை ராஜதானி நகரத்துக்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது.

தொடக்கத்தில் ‘சுப்ரீம் கோர்ட்ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்ட நிலையில், பின்னர் உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862 ஆகஸ்ட் 15 முதல் ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1996-ல் மெட்ராஸ் என்பதை சென்னை என்று சட்டப்பூர்வமாக மாற்றம் செய்தபோதும், உயர் நீதிமன்றத்தின் பாரம்பரிய பெருமை கருதி மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்றே தொடர்கிறது. 2016-ல் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடத்துக்கு முன், கொய்யாத்தோப்பு எனப்படும் ஜார்ஜ்டவுன் பகுதியில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கி வந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துக்கு தனி கட்டிடம் வேண்டும் என எழுப்பிய கோரிக்கையை ஏற்று, தற்போதுள்ள பாரம்பரியக் கட்டிடம் கட்டப்பட்டது.

ஜே.டபிள்யு.பிஸிங்டன் என்பவரின் வடிவமைப்பில் ஹென்றி இர்வின், ஜெ.ஹெச்.ஸ்டீபன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்றத்திற்கென பிரம்மாண்ட கட்டிடத்தை இந்தோ- சார்செனிக் முறையில், சுமார் 100 ஏக்கர் பரப்பில் 1892-ல் ரூ.12.98 லட்சம் செலவில் கட்டி முடித்தனர்.

எம்டன் தாக்குதலால் சேதம்

அரண்மனை போன்ற தோற்றமுடைய இந்தக் கட்டடம் கடந்த1914 செப். 22-ல், முதல் உலகப்போரின்போது ஜெர்மனியின் எம்டன்போர்க்கப்பல் தாக்குதலால் சேதமடைந்து, பின்னர் சீரமைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் உள்ள கல்தூண்கள், கண்ணாடிகள் பொதிந்த அழகிய வேலைப்பாடுகள், பிரம்மாண்ட கதவுகள், அண்ணாந்து பார்க்க வைக்கும் மேல்விதானம், நீதிபதிகள் அமருமிடம், நீதிமன்ற அறை, நடைபாதை, நீதிபதிகளுக்கான சேம்பர், அலுவலகங்கள் என உட்புறத் தோற்றமும், சிவப்பும், வெள்ளையும் நிறைந்த கோபுரங்களுடன் கூடியவெளிப்புறத் தோற்றமும், ஆங்கிலேய கலைநயத்துடன் கூடிய கட்டுமானமும் வியப்பில் ஆழ்த்தும்.

கலங்கரை விளக்கம்

கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில், இங்குள்ள உயரமான மாட கோபுரத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது.மெரினாவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்ட பிறகு இதுபாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, பின் நீதிபதியாக உயர்ந்த திருவாரூர் முத்துசாமி ஐயரின் பளிங்கு சிலையும், வெளிப்புறத்தில் நீதிபதி பாஷ்யம் ஐயங்காரின் சிலையும், தமிழர்களின் நீதிபரிபாலனத்தை பறைசாற்றும் மனுநீதிச் சோழன் சிலையும் உயர் நீதிமன்ற வளாகத்தை அலங்கரிக்கின்றன.

மேலும், அரிய புகைப்படங்கள், நீதிமன்ற மாதிரி வடிவமைப்பு, மேஜை,நாற்காலி உள்ளிட்ட கலைப் பொருட்கள், முதன்முதலாக திறந்து வைத்த நீதிபதிகள், ஷெரீப் ஆகியோரது மெழுகுச் சிலைகள், சட்ட நூல்கள் கொண்ட அருங்காட்சியகமும் தனியாக செயல்பட்டு வருகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான மரங்களும், ஆயிரக்கணக்கான பறவைகளும் இங்குள்ளன.

உயர் நீதிமன்றத்தின் அழகையும், பாரம்பரியத்தையும் நீதிபதிகள் தலைமையில் இயங்கும் ஹெரிடேஜ் கமிட்டிஅவ்வப்போது சீரமைத்து, பழமை மாறாமல் பாதுகாத்து வருகிறது.

நீதிமன்றத்தின் அழகு, பாரம்பரியம், வரலாற்றை மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளும் வகையில் `ஹெரிட்டேஜ் வாக்’ என்ற பாரம்பரிய நடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாகூறும்போது, “இதுவரை சுமார் 8,500 மாணவ, மாணவிகள் உயர்நீதிமன்றத்தின் அழகையும், பாரம்பரியத்தையும் கண்டுகளித்துள்ளனர். கரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்ட ஹெரிடேஜ் வாக் மீண்டும் புத்தாண்டு முதல் தொடங்கப்படுகிறது. உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கண்டு ரசிக்கலாம். இதற்காக, உயர் நீதிமன்ற பதிவுத் துறையின் இ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டு, சிறப்பு அனுமதி பெறவேண்டும்” என்றார்.