இந்திய கிரிக்கெட் அணியில் வேகமாக முன்னேறி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பிறந்தாள் இன்று (மார்ச் 13).

1994-ம் ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் முகமது சிராஜ் பிறந்தார். இவரது அப்பா முகமது கோஸ் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அம்மா ஷபானா பேகம் பல்வேறு வீடுகளில் வேலை பார்த்து சிராஜையும் அவரது சகோதரரையும் படிக்க வைத்துள்ளார். சிறுவயதில் படிப்பில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட்டில் ஆர்வம்காட்டி வந்துள்ளார் முகமது சிராஜ். இதற்காக அவரது தாயார், பலமுறை சிராஜை கண்டித்துள்ளார். ஆனால் அவரது தந்தை, சிராஜின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவித்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், பயிற்சியாளரை நியமித்து பயிற்சி மேற்கொள்ள சிராஜால் முடியவில்லை. அதனால் தொலைக்காட்சிகளில் பல்வேறு போட்டிகளையும் பார்த்து சுயமாக பயிற்சி பெற்றுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் வீட்டருகே நடந்த டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்த சிராஜை, அவரது நண்பர்கள்தான் தொழில்முறை கிரிக்கெட் வீரராகுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து சார்மினார் கிரிக்கெட் கிளப்பில் அவர் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் பேட்டிங்கில் கவனம் செலுத்திய முகமது சிராஜ், பின்னாளில் வேகப்பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

2015 – 16-ம் ஆண்டில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டி, இந்திய அணிக்கு தேர்வு என்று வெகு வேகமாய் முன்னேறிய முகமது சிராஜ், ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கச் சென்றபோது அவரது அப்பா இறந்துவிட்டார். இருப்பினும் அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட வராமல் இந்தியாவுக்காக ஆடியுள்ளார் சிராஜ். இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதுதான் நான் அவருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி” என்று கூறியுள்ளார்.