தமிழகத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற திமுகவின் தலைவர் ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது.

அறுதிப்பெரும்பான்மை பெற்றதால் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல்வராக பதவி ஏற்க உள்ளார். தேர்தல் வெற்றிக்குப்பின் நேரு உள் அரங்கில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

அங்கு அவருக்கும் இன்ன பிற அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதற்கு முன் நாளை தேர்வு செய்யப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், உதய சூரியன் சின்னத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய கூட்டம் முறைப்படி முதல்வராக ஸ்டாலினை தேர்வு செய்யும். அதன் பின் தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநரை சந்தித்து பதவி ஏற்புக்கு அழைப்பு விடுக்க கோருவார்.

இதன்படி மே 7 அன்று முறைப்படி முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். இதன் மூலம் திமுகவின் மூன்றாவது முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்யப்படும் முதல்வராகிறார். முன்னதாக காலை கோபாலபுரம் சென்று தாயாரிடம் ஆசிப்பெற்றார்.