‘நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் 1.20 நிமிடம் இடைவெளியில்லாமல் சிங்கிள் ஷாட்டில் நடனமாடியுள்ளார்” என படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், “நான் அனைத்து மொழியிலும் ஹீரோக்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். தெலுங்கில் பவன் கல்யாண்; கன்னடத்தில் புனித் ராஜ்குமார் என்னுடைய பேவரைட். அதுபோல தமிழ் சினிமாவில் எனக்கு பேவரைட் விஜய். கனிவான உள்ளம் கொண்டவர் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கிறார்.

‘ரஞ்சிதமே’ பாடலில் 1.20 நிமிஷம் சிங்கிள் ஷாட்டில் விஜய் இடைவெளியில்லாமல் பிரமாதமாக ஆடியிருக்கிறார். அந்தப் பாடலில் 1 நிமிடம் நிச்சயம் நீங்கள் எல்லோரும் நடனமாடுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.