கரோனா மூன்றாவது அலை இந்தியாவில் தனது பிடியை இறுக்கியுள்ளது. நாடு முழுவதும் 29 மாநிலங்களில் 120 மாவட்டங்களில் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 10% ஆக உள்ளது. ஆனால் அதேவேளையில் மும்பையில் கரோனா பாசிடிவிட்டி விகிதம் ஏறிய வேகத்தில் இறங்கி வருவது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி வெறும் 2 மாநிலங்களில் மட்டுமே பாசிடிவிட்டி விகிதம் 10% ஆக இருந்தது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி 17 மாநிலங்களின் 41 மாவட்டங்களில் 10% பாசிடிவிட்டி விகிதம் இருந்தது. ஆனால் ஜனவரி 11 நிலவரப்படி நாடு முழுவதும் 29 மாநிலங்களில் 120 மாவட்டங்களில் வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 10% ஆக அதிகரித்துள்ளது. (பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்குத் தொற்று உள்ளது என்பதன் விகிதம்)
இதனால் இந்தியாவில் கரோனாவின் பிடி நாளுக்கு நாள் இறுகுவது உறுதியாகியுள்ளது.
இன்றைய நிலவரம் இதுதான்: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும், 1.94,720 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 60,405 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,55,319ஆக உள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 11.05% ஆக உள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு 4,868 ஆக உள்ளது.
நம்பிக்கை தரும் மும்பை நிலவரம்: நாடு முழுவதும் 120 மாவட்டங்களில் 10% பாசிடிவிட்டி விகிதம் இருந்தாலும் கூட ஒமைக்ரான் தொற்று அதிகமாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் நிலவரம் நாட்டுக்கே நம்பிக்கை தருவதாக இருக்கின்றது. மும்பையில் நேற்று செவ்வாய்க்கிழமை 11,647 பேருக்கு தொற்று உறுதியானது இது முந்தைய நாளைவிட 14.66% குறைவு. அதேபோல் டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதமும் (TPR) 23%ல் இருந்து 18% ஆகக் குறைந்துள்ளது. ஜனவரி 10ல், 13,648 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் 59.242 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஆனால் அதுவே ஜனவரி 11 (நேற்று), 62,097 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 11,647 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. மருத்துவமனையில் அனுமதியான படுக்கை நோயாளிகளின் விகிதமும் இதே காலக்கட்டத்தில் 21%ல் இருந்து 19.9% ஆகக் குறைந்துள்ளது.
ஜனவரி 7ஆம் தேதி முதலே மும்பையில் அன்றாட பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே கூறும்போது, மும்பை தொற்றுப்பரவல் குறையத் தொடங்கிவிட்டது என்று இப்போதே கூறுவது சரியல்ல. ஆனாலும் குறைவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா நிலவரம்: கடந்த நவம்பர் 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அப்போது அங்கு அன்றாடம் தொற்றின் வேகம் 4 மடங்கு அதிகரித்தது. ஆனால், அதே வேகத்தில் தொற்று பரவல் குறைந்தது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் நாட்டில் கரோனா பரவலின் வேகம் ஒரே மாதத்தில் 40% குறைந்துள்ளது எனத் தெரிவித்தது. நேற்றைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்காவில் புதிதாக 5,668 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தேசிய தொற்றுநோய்கள் மையத்தின் இணையதளத்தில் இது தொடர்பான புள்ளி விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதன்படி , தென் ஆப்பிரிக்காவில் கடந்த 7 நாட்களில் பதிவான தொற்றின் சராசரி 18.3%, இது நேற்று ஒரு நாள் பாதிப்பான 19.2 சதவீதத்தைவிடக் குறைவு.
தென் ஆப்பிரிக்காவில் தொற்று குறையும் வேகம், மும்பையில் தொற்று குறையும் வேகம் ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டால் நாடு முழுவதும் 3வது அலையின் தாக்கம் விரைவில் உச்சம் தொட்டு சரியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் நோயை எதிர்கொள்ள நம்பிக்கையும் அவசியம் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.