மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்காக மின்வாரியம் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்100 இடங்களில் சார்ஜிங் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின் விநியோகம் செய்வதற்காக 3.76 லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைமற்றும் காவிரி கரையோர மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சில இடங்களில் மின்மாற்றிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நீலகிரியில் 150, மேட்டூரில் 12, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களில் தலா4 உட்பட மொத்தம் 182 மின்மாற்றிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படாததால், 5,392 வீடுகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தவிர, நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவை 5-ம் தேதி (நேற்று) மாலைக்குள் அகற்றப்பட்டுவிடும். அதன்பிறகு மின்விநியோகம் தொடங்கப்படும். அதேபோல, காவிரி கரை ஓரத்தில் வெள்ளம் வடியத் தொடங்கியதும், அப்பகுதிகளில் மின் விநியோகம் தொடங்கும்.

தற்போது, காற்றாலை, சூரியசக்தி மின்னுற்பத்தி மூலம் அதிக மின்சாரம் கிடைப்பதால், அனல்மின் உற்பத்தி சற்று குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தடையில்லாமல் சீரானமின்விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்காக மின்வாரியம் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 100 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.