ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி முதல் மே மாதம் 7-ம் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது தினமும் வினாத்தாள்கள் கசிந்து பரபரப்பை உண்டாக்கின. இது தொடர்பாக 25 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் நாராயணாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவருக்கு சொந்தமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன. எனவே, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோர்களையும், மாணவர்களையும் கவரவே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டார் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், நாராயணா கல்வி நிறுவனத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாராயணாவை, ஆந்திர சிஐடி போலீஸார் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறும்போது, “இது அரசியல் பழிவாங்கும் செயல். நாராயணாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் வினாத்தாள் வெளியானதால் அவரை கைது செய்தோம் என போலீஸார் கூறுகின்றனர். அப்படியானால், பல அரசு பள்ளிகளில் கூட வினாத்தாள்கள் கசிந்தன. ஆதலால், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கல்வித்துறை அமைச்சர் சத்தியநாராயணா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும்” என்றார்.