மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்தாலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் என்னென்ன முழு விவரம்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 24 முதல் தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழு ஊரடங்கு வரும் ஜூன் 7-ம் தேதி அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில் நோய்த்தொற்று தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும் நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் இந்த முழு ஊரடங்கு ஜூன் 7 முதல் ஜூன் 14 காலை 6 மணிவரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

எனவே மேற்கண்ட மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் ஜூன் 7 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை நிறுவனங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

*இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் கொடுத்து பதிவுகள் செய்ய அனுமதிக்கப்படும்.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் நடந்துச் சென்று பொருட்களை வாங்கலாம், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் இந்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகிறது.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.