12ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் மாணவர் வெங்கட சதீஷ் (17). இவர் கூடூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்றைய தினம் ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்காக மாணவர் சதீஷ் பள்ளி சென்றுள்ளார்.அங்கு வழக்கம்போல், தேர்வுகளை முடித்து விட்டு தேர்வு மையத்தின் வெளியே வந்த போது அவருக்கு மார்பு வழி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவன் சதீஷ் சக மாணவர்களிடம் தனக்கு வழி ஏற்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ளான், தொடர்ந்து, அந்த மாணவர்கள் பள்ளியில் காவல் பணியில் இருந்த போலீசாரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மாணவர் சதீஷை உடனடியாக அழைத்து சென்று காற்றோட்டமான இடத்தில் போலீஸ் அதிகாரிகள் அமர வைத்துள்ளனர். எனினும், அவருக்கு மூச்சுத் திணறல் அடங்கவில்லை. இதையடுத்து, ஆம்புலன்ஸூக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர தாமதமாகவே, போலீசாரே மாணவன் சதீஷை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாணவனின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனை வந்துள்ளனர்.எனினும், பெற்றோர் மருத்துவனை வருவதற்கு முன்பே மாணவன் சதீஷ் உயிரிழந்துவிட்டதால், அவர்களால் கடைசி நேரத்தில் கூட தனது மகனுக்கு உடனிருந்து ஆறுதல் தெரிவிக்க முடியாமல் போனது. இதனால், மருத்துவமனை வளாகத்திலே மாணவனின் பெற்றோர் கதறி துடித்தனர்.தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.