கரோனா காலத்தில் சென்னையில் 25,900 மரணங்கள் கூடுதலாக பதிவாகி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதில் 2-வது அலையின்போது மட்டும் கூடுதலாக 17,700 மரணங்கள் பதிவாகி இருக்கலாம் என்று ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

3-வது இடம்: கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக எண்ணிகையில் கரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை 5.22 லட்சம் கரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், உண்மையாக கரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று பல ஆய்வு அறிக்கைகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, கரோனா காலக்கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மரணங்கள் (வழக்கமானவை) பதிவாகி உள்ளதால், கரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கலாம் என்று இந்த ஆய்வு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன.

குற்றச்சாட்டு: இந்தியாவில் கரோனா மரணங்கள் தொடர்பான தகவல்களை அளிப்பதில் இந்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை, “சில நாடுகள் தரும் கரோனா இறப்பு விவரங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் உலக சுகாதார அமைப்பு, இந்தியா போன்ற சில நாடுகளில் ஏற்பட்ட மரணங்களை கணிதவியல் கோட்பாடுகள் அடிப்படையில் அளிக்க கூறுகிறது” என்று பதில் அளித்து இருந்தது.

40 லட்சம் பேர்: இந்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி மார்ச் 2020 முதல் ஜூன் 2021 வரை 4.89 லட்சம் கரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி பார்த்தால் 1000 பேரில் 18 பேர் பலியாகி இருந்தனர். ஆனால், 40.70 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைந்து இருக்கலாம் என்று உலகப் புகழ் பெற்ற மருத்துவ இதழான ‘தி லேன்செட்’ ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி 1,000 பேரில் 153 பேர் கரோனா தொற்றால் மரணம் அடைந்து இருக்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2.60 லட்சம்: இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் கரோனா தொற்றால் 2.60 லட்சம் பேர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,000 பேரில் 169 பேர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி 1,000 பேருக்கு 24 பேர் என்ற அடிப்படையில் 36,800 பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்… – சென்னையில் கரோனா காலமான 2020 மார்ச் முதல் 2021 ஜூன் வரை பதிவான மொத்த மரணங்கள் குறித்து ‘தி லேன்செட்’ இதழில் ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஆய்வின்படி சென்னையில் 62,690 மரணங்கள் (வழக்கமானவை) பதிவாகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88,107 மரணங்கள் பதிவாகியுள்ளது இந்த இதழில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 25,990 மரணங்கள் கூடுதலாக பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.

2வது அலை: முதல் அலையில் சென்னையில் 5430 மரணங்களும், 2-வது அலையில் 17,700 மரணங்களும் கூடுதலாக பதிவாகி இருக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது அலை பாதிப்பில் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு படுக்கை கிடைக்காத நிலை இருந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் சென்னையில் 17,700 மரணங்கள் கூடுதலாக பதிவாகியுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசின் கணக்கு? – தமிழக அரசின் பிறப்பு, இறப்பு பதிவின்படி 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சென்னையில் 73,303 மரணங்கள் பதிவாகியுள்ளது. இதைப்போன்று 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 92,291 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி பார்த்தால் ஓராண்டு காலத்தில் 19,618 மரணங்கள் வழக்கத்தை விட கூடுதலாக பதிவாகியுள்ளன.

கரோனா மரணங்கள் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், உண்மையான மரணங்களின் எண்ணிக்கை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.