தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில் 17,196 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18,100 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று (மார்ச்.10) மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று 10/03/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக மெகாவாட் அளவில் 17,647 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 04/03/2023ல் 17,584” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கோடைகால உச்சபட்ச மின் தேவையான 18,500 மெகாவாட்டினை பூர்த்தி செய்வதற்கு அனல், புனல் மின் நிலையங்கள், மாநில மற்றும் மத்திய தொகுப்புகள், காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள், மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறையின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் உள்ளிட்ட பல்வேறு வகையில் மின்சாரத்தைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.