திருச்சி மாவட்டத்தில் கூடுதல் கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்ததாகக் கூறி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை விடுதிகளில் பணியாற்றி வந்த 19 சமையலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையரின் 26.5.2020 நாளிட்ட கடிதத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தேர்வுக் குழு மூலம் முறையாக நேர்காணல் செய்து 135 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு, பணியில் உள்ளவர்களில் கூடுதல் கல்வித் தகுதி உடைய 34 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 31 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிடுமாறும், மீதமுள்ள 3 பேர் உரிய கல்வித் தகுதியைவிட கூடுதலாக கல்வி பயின்றிருக்கலாம் என சந்தேகம் எழுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, தவறு இருக்கும் பட்சத்தில், அவர்களது பணி நியமனஆணையையும் ரத்து செய்யுமாறு ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் 12.1.2022 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமையலராக பணியில் சேர்ந்தவர்களின் கல்விச்சான்றிதழ்கள் 3 முறை ஆய்வு செய்யப்பட்டு, அவர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த19 பேருக்கு அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்து தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கலாம் என ஆட்சியர் மா.பிரதீப்குமார் 2.9.2022 அன்றுஆதிதிராவிடர் நலத் துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எனினும், 19 பேரையும் பணியிலிருந்து விடுவித்து டிச.16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான கடிதத்தை மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகம் தனித்தனியே வழங்கியுள்ளது.

இது குறித்து பணியிலிருந்து நீக்கப்பட்ட பரசுராமன் என்பவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை விடுதிகளில் சமையலர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக விதிகள் வகுத்து அத்துறையின் ஆணையர் 23.2.2022 அன்றுமாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தற்காலிக விதிகள் 6 (C)-ல் சமையலர் பணி நியமனத்துக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதிதிராவிடர் நலத் துறையின் 25.10.2011 தேதியிட்ட அரசாணை எண்.95-லும் இந்தப் பணிக்கு அதிகபட்ச கல்வித் தகுதி (10-ம் வகுப்பில் தோல்வி) குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகங்களில் இப்பணிக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தோம். அப்போதே இந்த விண்ணப்பங்களை ரத்து செய்யாமல், பணியை வழங்கி விட்டு,ஏறத்தாழ 2 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், தற்போது பணி நீக்கம் செய்வது எந்த வகையில் நியாயம் என புரியவில்லை.

இது, திருச்சி மாவட்டத்தில் மட்டும் நிகழவில்லை. பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்று, சிலர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளனர். இந்தப் பணியில் கிடைத்த ஊதியத்தை வைத்துதான் நாங்கள் குடும்பம் நடத்திவந்தோம். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையையும் துறை ஆணையர் ஏற்றுக் கொள்ளவில்லை. பணியிலிருந்து நீக்கியதால் தற்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார்.

அரசு ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கான உத்தரவை வெளியிடும்போது, அதற்கான தகுதிகளை முறையாக வரையறுத்து வெளியிடாததே தற்போது இந்த பணி நீக்கத்துக்கு உண்மையான காரணம் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.