திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் வெறும் அரை மணி நேரத்தில் 2.96 லட்சம் சர்வ தரிசன டிக்கெட்டுகளை நேற்று முன்பதிவு செய்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் வரும் அக்டோபரில் ரூ. 300 சிறப்பு தரிசன முறையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 8 ஆயிரம் வீதம் நேற்று முன்தினம் டிக்கெட்டுகளை வெளியிட்டது. இதில் அக்டோபர் 31 வரையிலான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவாகி விட்டது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது. நேரடியாக டிக்கெட் வழங்கினால், பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் ஆன்லைனில் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி அக்டோபர் 31 வரையிலான சர்வதரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. தினமும் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம், 37 நாட்களுக்கான 2.96 லட்சம் டிக்கெட்டுகள் வெறும் அரை மணி நேரத்தில் முன்பதிவாகி விட்டது. புரட்டாசி மாதம் மற்றும் ஏகாந்த முறையிலான பிரம்மோற்சவம் போன்றவற்றால் டிக்கெட்டுகள் வெகு விரைவில் முன்பதிவாகி விட்டதாக கருதப்படுகிறது.