புதுடெல்லி: முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20% பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை வந்த விண்ணப்பங்களில் தகுதியானோரை அலசி ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்திய கடற்படை இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது.

அதேபோல் விமானப்படையில் சேர இதுவரை 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவலும் வெளியாகியுள்ளது. இன்று மாலையுடன் விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு பெறுகிறது.

20% பெண்கள்: இந்நிலையில், இந்திய கடற்படை தான் இதுவரை பெற்ற விண்ணப்பங்களில் ஏற்கத்தக்க தகுதியுள்ளவற்றில் 20% பெண்களுடையது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறாக தேர்வாகும் 20% பெண் அக்னி வீரர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள்.

கடற்படை அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பை ஜூலை 1ல் தொடங்கியது. நேற்று (ஜூலை 4) நிலவரப்படி 10,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அக்னி பாதை திட்டமானது பாலின சமத்துவத்துடன் செயல்படுத்தப்படும். இப்போது, இந்திய கடற்படையில் முன்னணி போர்க்கப்பல்களில் 30 பெண் உயர் அதிகாரிகள் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர்.

கடற்படையில் சேரும் பெண் அக்னி வீரர்கள், ஆர்டினன்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் நேவல் ஏர் மெக்கானிக்ஸ், தொலைதொடர்பு செயல்பாடு, எலக்ட்ரானிக் வார்ஃபேர், கன்னரி வெப்பஸ், சென்சார்ஸ் என பலதுறைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், முதன்முறையாக போர்க்கப்பல்களில் மாலுமிகளாகவும் பணியமர்த்தப்படுவர் என்று கடற்படை தெரிவித்துள்ளது. பெண்கள் மாலுமிகளாகச் செல்லும் காலம் வந்துவிட்டது என்று கடற்படை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அக்னி பாதை திட்டம்: ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம்.

இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஆள்சேர்ப்பு அறிவிக்கை வெளியானதில் இருந்து இளைஞர்கள் பெருமளவில் விண்ணப்பித்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். விரைவில் முதல் பேட்ச் ஆள்சேர்ப்பு விரைவில் முடிந்து பயிற்சி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.