தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் மொத்தம் 22,000 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறையின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த 3 மருத்துவ துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகள் தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரையில் மொத்தம் 22,000 காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
மருத்துவ கல்வி இயக்ககம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 10,268 மருத்துவர்கள் பணியிடங்களில் 1080 பணியிடங்கள் காலியாக உள்ளன. 13,018 நிரந்தர செவிலியர் பணியிடங்களில் 1206 பணியிடங்களும், 1866 தற்காலிக செவிலியர் பணியிடங்களில் 269 பணியிடங்களும் காலியாக உள்ளன. 5742 அமைச்சு பணியாளர்களில் 1952 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10,843 மருத்துவம் சார்ந்த பணியாளர்களில் 6246 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்படி மொத்தம் 10,753 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம்: மருத்தும் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 3814 மருத்துவர் பணியிடங்களில் 381 மருத்துவர்கள் பணியிடங்கள், 4343 நிரந்திர செவிலியர்களில் 20 பணியிடங்கள், 2196 ஒப்பந்த செவிலியர்களில் 190 பணியிடங்கள், 1124 மருந்தாளுனர்களின் 167 பணியிடங்கள், 2599 மருத்துவம் சார்ந்த பணியாளர்களில் 746 பணியிடங்கள், 1385 இதர பணியாளர்களில் 746 பணியிடங்கள் என்று மொத்தம் 2889 இடங்கள் காலியாக உள்ளன
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை: பொது சுகாதாரத் மற்றும் நோய் தடுப்புத் துறையில் 6498 மருத்துவ அலுவலர்களில் 1500 பணியிடங்கள், 6498 ஒப்பந்த செவிலியர்களில் 2294 பணியிடங்கள், 2496 ஆய்வக நுட்புனர்களில் 391 பணியிடங்கள், 1835 மருந்தாளுநர்களில் 611 பணியிடங்கள், 385 கண் சிகிச்சை உதவியாளர்களில் 85 பணியிடங்கள், 4909 பல் நோக்கு பணியாளர்களில் 1116 பணியிடங்கள், 10770 கிராம சுகாதார செவிலியர்களில் 1585 பணியிடங்கள், 302 மருத்துவமனை பணியாளர்கள், 148 துப்புரவாளர்கள், 172 சுகாதார பணியாளர்கள், 159 ஆண் செவிலிய உதவியாளர்கள், 79 பெண் செவிலிய உதவியாளர்கள், 256 தினக் கூலி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் என்று மொத்தம் 8698 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஆக, இந்த மூன்று முக்கியத் துறைகளில் மொத்தம் 22,000 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியை சுகாதார ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
நடவடிக்கை என்ன? – இந்தப் பணியிடங்களில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 1,383 பணியிடங்களை மட்டுமே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி திறன் மிக உதவியாளர்கள், உதவி மருத்துவர், கிராம சுகாதார செவிலியர்கள், மருந்தாளுநர்கள், கள உதவியாளர்கள், செவிலியர்கள், இருட்டறை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனத்துக்குரியது.