திருவள்ளூரில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், அந்த பள்ளியில் படித்த 23 மாணவிகள் தற்போது டிசி வாங்கிச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயின்று வந்த தெக்கலூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி அவர் தங்கியிருந்த விடுதியில் கடந்த ஜூலை25ஆம் தேதி தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மப்பேடு காவல்துறையினர் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளனர்.

மேலும், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை சுமார் 859 மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவி தற்கொலை சம்பவத்திற்கு பின்னர் 17 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் நேற்று தான் பள்ளி திறக்கப்பட்டது.

நேற்று பல மாணவிகள் பள்ளிக்கு வராத நிலையில், அங்கு பயின்று வந்த 23 மாணவிகள், தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் பயின்று வந்த அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழை(TC) வாங்கிச் சென்றனர்.பல மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வர விரும்பாத நிலையில், பள்ளியை விட்டு வெளியேறும் மாணவிகள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.