புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா மற்றும் புதிய உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அதன் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனிடையே, புதுச்சேரியில் புதிதாக 2,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (ஜன. 22) வெளியிட்டுள்ள தகவலில், “புதுச்சேரி மாநிலத்தில் 5,221 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,870 பேருக்கும், காரைக்காலில் 470 பேருக்கும், ஏனாமில் 83 பேருக்கும், மாஹேயில் 23 பேருக்கும் என மொத்தம் 2,446 பேருக்கு (46.85 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 316 ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 146 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 14,922 பேரும் என மொத்தம் 15,068 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதுச்சேரி ஜமீன்தார் கார்டனைச் சேர்ந்த 69 வயது முதியவர், மரியால் நகரைச் சேர்ந்த 73 முதியவர், காரைக்காலைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,901 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 88.71 சதவீதமாக உள்ளது.
புதிதாக1,479 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 347 (88.71 சதவீதம்) ஆக அதிகரித்தது. இதுவரை 15 லட்சத்து 18 ஆயிரத்து 541 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.”
இவ்வாறு சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.