புதுச்சேரியில் 25-வது தேசிய புத்தகக் கண்காட்சி வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 10 நாள் நடைபெறுகிறது.

இதுகுறித்துப் புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத் தலைவர் முத்து, சிறப்புத் தலைவர் பாஞ்.ராமலிங்கம் ஆகியோர் இன்று (டிச.4) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 25-வது தேசிய புத்தகக் கண்காட்சி வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 10 நாள் நடக்கிறது. இந்த வெள்ளி விழா தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழா 17-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கண்காட்சியைத் திறந்துவைத்து வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி நூலை வெளியிடுகிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்குகிறார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புத்தக சேவா ரத்னா விருதுகள் வழங்குகிறார்.

அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, ஜான்குமார் எம்எல்ஏ, சென்னை சோவியத் ரஷ்யா தூதரக உயர் அதிகாரி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். சங்கச் செயலாளர் கோதண்டபாணி நன்றி கூறுகிறார்.

வெள்ளி விழா கண்காட்சி என்பதால் தொடக்க விழாவில் 25 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அரசு நிறுவனத்தினர் அரங்குகள் அமைக்கின்றனர்.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்குத் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படும். பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு 25 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படும்.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம். கரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் இவ்வாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சிக்கு வரும் அனைத்துப் பார்வையாளர்களும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 ரூபாய்க்குப் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழும், ஆயிரத்தின் மடங்கில் நட்சத்திரச் சான்றிதழும் வழங்கப்படும். ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாகப் புத்தகம் வாங்குவோருக்கு புத்தகச் சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்படும். கரோனா விழிப்புணர்வு கவியரங்கம், பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடைபெறும். மேலும் எழுத்தாளர்கள் பங்கேற்று வாசகர்களுடன் கலந்துரையாடுவர். கண்காட்சி வளாகத்தில் தினமும் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறும்.

கடந்த 2019-ல் ரூ.80 லட்சத்துக்குப் புத்தகங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு கரோனா காலத்திலும் ரூ.60 லட்சத்துக்குப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். மேலும் விவரங்களுக்கு 96269 53800 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’’.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘இந்து தமிழ் திசை’ பதிப்பக நூல்களுக்குத் தனி அரங்கு

நமது ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக நூல் அரங்கும் கண்காட்சியில் இடம் பெறவுள்ளது. நமது பதிப்பகத்தில் இருந்து வெளியாகி, விற்பனையில் முன்னணி வகிக்கும், ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ‘தெற்கில் இருந்து ஒரு சூரியன்’, ‘சித்திரச் சோலை’, ‘என்றும் காந்தி’ உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இடம் பெறுகின்றன.