தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவிட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், டீக்கடைகள் திறக்க அனுமதிக்கவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது டீக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. கரோனா தொற்று உச்சத்தை அடைந்ததை அடுத்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் வாராவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

இதையடுத்து வரும் 15ஆம் தேதி முதல் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதில் 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அதிகமாக அளிக்கப்பட்டன. 27 மாவட்டங்களில் சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகள், கம்ப்யூட்டர், செல்போன் ரீசார்ஜ் விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் டீக்கடைகள் திறக்கப்படாதது குறித்து ஆட்சேபம் எழுந்தது.

இந்நிலையில் டீக்கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 27 மாவட்டங்களில் டீக்கடைகளைத் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணி வரை செயல்படலாம், பார்சல் மட்டுமே அனுமதி என உத்தரவிடப்பட்டுள்ளது. அமர்ந்து அருந்த அனுமதி கிடையாது.

இனிப்பு, காரக் கடைகள் காலை 8 மணிமுதல் 2 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையை முன்னிட்டு இ-சேவை மையங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் இந்த அனுமதி இருக்கும்.