எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘வசந்தராகம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நாயகனாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் டிசம்பர் 4, 1992ஆம் ஆண்டு வெளியானது. அதன்படி விஜய் நடிக்க வந்து இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ரஜினிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகத் திகழும் ஒரு நடிகரைக் கை காட்டுங்கள் என்றால் அத்தனை பேரின் கைகளும் விஜய்யை சுட்டிக்காட்டும். அந்த அளவுக்கு அசுர பலத்துடன் தன் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ளார் விஜய். வசந்தம் ஒரே நாளில் வந்துவிடாது. அதுபோல்தான் இந்த வெற்றியும் விஜய்க்கு அவ்வளவு விரைவில் கைவரப்பெறவில்லை.

நாளைய தீர்ப்பு

சினிமாவில் வாரிசு நடிகர் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் விஜய் நடிக்க வந்தபோதுதான் தொடங்கின. ஆனால், அவருடன் நடிக்க வந்து திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த பலர் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் காணாமல் போயிருக்கிறார்கள் அல்லது அந்த மாய வித்தை தெரியாமல் திணறி, அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காமல் ஒதுங்கிப் போயுள்ளனர். ஆனால், உச்ச நட்சத்திரத்துக்குரிய அந்தஸ்தைப் பெற விஜய் தன்னைத் தொடர்ந்து தகுதிப்படுத்திக் கொண்டார். அதனாலேயே இப்போதும் அந்த நற்பெயரை, வியாபார மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.

‘நாளைய தீர்ப்பு’ படம் வந்தபோது விஜய்யை உருவ கேலி செய்து அவமானப்படுத்திய முன்னணிப் பத்திரிகைகள், வெகுஜன ரசிகர்கள் கூட இன்று அவரை ஆகச் சிறந்த ஆளுமை என்று புகழாரம் சூட்டி கவுரவப்படுத்துகிறார்கள். அதுதான் அவர் கடந்து வந்த பாதைக்கான ஒரு பருக்கை உதாரணம்.

சினிமாவுக்குள் நடிக்க வந்த உடனேயே பாட்டு, டான்ஸ், ஃபைட் என்று அனைத்தையும் விஜய் கற்றுக்கொண்டு வரவில்லை. ஆனால், நாயகனுக்கான அத்தனை விஷயங்களையும் திரைத்துறக்கு வந்த பிறகு கசடறக் கற்றார். இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்று பாடலுக்குக் கீழே ஸ்லைடு போடும்போது கைகொட்டிச் சிரித்தவர்கள் இன்று அவரின் பாடும் திறனை சிலாகித்துப் பேசுகிறார்கள். நடன அசைவை வாய் பிளந்து ரசிக்கிறார்கள். சண்டைக் காட்சியில் துல்லிய நடிப்பைக் கண்டு கரவொலி எழுப்புகிறார்கள்.

‘பூவே உனக்காக’ தந்த மாற்றம்

அப்பாவின் இயக்கத்தில் நடித்த விஜய்யின் படக் காட்சிகள் சர்ச்சைகளைச் சந்திக்காமல் இருந்ததில்லை. மாமியாருக்குக் குளியலறையில் சோப் போடும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் விமர்சனங்களுக்கு ஆட்பட்டார். அந்த இமேஜை அப்படியே மாற்றியது, விஜய்யைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது ‘பூவே உனக்காக’ படம்தான் என்றால் அது 200 சதவீத உண்மை.

கள்ளம் கபடமில்லாத, அப்பழுக்கற்ற தூய ஆன்மாவின் வெளிப்பாடாகவே விஜய்யின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. அதுவரை ஒருதலைக்காதல் என்று கொஞ்சம் கூச்சமாகவும், தோல்வி அடைந்தவனின் முகாரி ராகமாகவும், அவமானமாகவும் உணர்ந்தவர்கள் அதுவும் உன்னதமான காதல்தான் என்று தலைநிமிர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள். உணரத் தொடங்கினார்கள். சொல்லாத காதல் வெல்லாது என்றாலும் அந்தக் காதலும் சுகமானதே என்று சுய சமாதானம் ஆனார்கள். அந்த சுய ஆறுதல் விஜய்யின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றிதான் என்பதை மறுக்க முடியாது.

அந்த நடிப்புக்குக் கிடைத்த ஆரவாரம்தான் விஜய்யைத் தொடர்ந்து காதல் படங்களில் கவனம் செலுத்த உந்து சக்தியாக இருந்தது. ‘லவ் டுடே’, ‘நிலாவே வா’,‘ப்ரியமானவளே’,‘குஷி’,‘என்றென்றும் காதல்’,‘வசீகரா’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஒன்ஸ்மோர்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’,‘காதலுக்கு மரியாதை’,‘ஷாஹஜான்’, ‘யூத்’, ‘ப்ரியமுடன்’, ‘மின்சார கண்ணா’,‘சச்சின்’,‘காவலன்’ என்று காதலின் அத்தனை பரிமாணங்களும் இருக்கும் படங்களில் நடித்தார். அதுவும் ‘காவலன்’ படத்தில் மென்மையான, அதே சமயம் உறுதியான காதலனைக் கண்முன் நிறுத்தினார். அப்படி ஒரு அமைதிப் பேர்வழியாக தன் இயல்பான குணத்தை பூமிநாதன் கேரக்டரில் கடத்திய விதமே பாத்திர வார்ப்புக்கு கம்பீரம் சேர்த்தது.

உதவி இயக்குநர்களின் தோழன்

உதவி இயக்குநர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்த உச்ச நட்சத்திரம் என்று விஜய்யைச் சொல்லலாம். ‘லவ் டுடே’ பாலசேகரன், ‘நினைத்தேன் வந்தாய்’ செல்வபாரதி, ‘ப்ரியமுடன்’ வின்சென்ட் செல்வா, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ எழில், ‘தமிழன்’ மஜீத், ‘திருமலை’ ரமணா, ‘மதுர’ மாதேஷ், ‘திருப்பாச்சி’ பேரரசு, ‘சச்சின்’ ஜான் மகேந்திரன், ‘அழகிய தமிழ் மகன்’ பரதன், ‘வேட்டைக்காரன்’ பாபு சிவன், ‘என்றென்றும் காதல்’ மனோஜ் கியான், ‘பத்ரி’ பி.ஏ.அருண் பிரசாத், ‘புதிய கீதை’கே.பி.ஜெகன் எனப் பெரிய பட்டியல் உள்ளது.

செல்வபாரதி, வின்சென்ட் செல்வா, ரமணா, பேரரசு, பரதன் ஆகிய பல இயக்குநர்களுடன் அடுத்தடுத்தும் சில படங்களில் கூட்டணி அமைத்து விஜய் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆக, விஜய் நடித்ததில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் உதவி இயக்குநர்களின் படங்கள்தான்.

ரீமேக் ஸ்டார்

ரீமேக் படங்களையும் தன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பார்த்து நடித்தார் விஜய். அந்தப் படங்களில் ‘ஆதி’, ‘வசீகரா’ எனும் இரு படங்கள் மட்டும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ‘கில்லி’,‘காவலன்’,‘போக்கிரி’, ‘பிரியமானவளே’,‘பிரண்ட்ஸ்’,‘நினைத்தேன் வந்தாய்’,‘காதலுக்கு மரியாதை’,‘நண்பன்’ மற்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. எல்லா மொழிப் படங்களையும் பார்க்கும் இப்போதைய வசதி வாய்ப்புகள் அப்போது இல்லாததும் ஒரு காரணம். மேலும், ரீமேக்தானே, ஏற்கெனவே வெளிவந்த படம்தானே என்று இல்லாமல் குட்டிக்குட்டி எக்ஸ்பிரஷன்களிலும், மேனரிசத்திலும் விஜய் தன் தனித்துவத்தைக் காட்டியிருப்பதும் படத்தின் வெற்றிக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டது.

கமர்ஷியல் பாதை

காதல் படங்களுக்குப் பிறகு ‘பகவதி’ படத்தில் ஆக்‌ஷன் பாதைக்கான வெள்ளோட்டம் பார்த்த விஜய் ‘திருமலை’ படத்தின் மூலம் தன் அடுத்தகட்ட பாய்ச்சலைத் தொடங்கி, அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார். ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’,‘போக்கிரி’,‘வேட்டைக்காரன்’,‘வேலாயுதம்’ என்று தொடர்ந்து ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார். அப்படியே யூ டர்ன் அடித்து ‘காவலன்’,‘நண்பன்’,‘துப்பாக்கி’ என்று கான்செப்ட் சினிமாவில் ஆச்சர்யம் காட்டினார்.

‘தலைவா’, ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்கார்’,‘பிகில்’,‘மாஸ்டர்’ என்று மாஸ் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காதல் என்ற பெயரில் பெண்களுக்கு அட்வைஸ் செய்து வந்த விஜய் ‘பிகில்’ போன்ற பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் படங்களிலும் நடித்து மரியாதை செலுத்தினார்.

சுதாரித்துக் கொள்ளும் கலைஞன்

‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் முதல் முதலாக இரட்டை வேடங்களில் நடித்தார் விஜய். ஆனால், இரு வேடங்களுக்கான நடிப்பில் ரசிக்கத்தக்க மேஜிக் நிகழவில்லை. எந்த நடிகருக்கும் இரட்டை வேடங்கள் என்றால் சவாலானது. அது சரியாக அமைந்துவிட்டால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ஆனால், அழகிய தமிழ் மகனில் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு திருப்தி அளிக்கவில்லை. ரசிகர்களின் பல்ஸ் அறிந்த விஜய் அதை ‘கத்தி’ படத்தில் சரிசெய்துகொண்டார். பிகிலிலும் அந்த மேஜிக் வொர்க் அவுட் ஆனது. ‘மெர்சல்’ படத்தில் மூன்று முகமாக வெரைட்டி காட்டி மிரள வைத்தார்.

வசூல் மன்னன்

விஜய்யின் எந்தப் படமும் பெரிய அளவில் தோல்விப் படமாக அமைந்து தயாரிப்பாளருக்கோ, திரையரங்க உரிமையாளர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ கையைக் கடித்ததில்லை. இத்தனைக்கும் விஜய் சம்பளம், தயாரிப்புச் செலவு, படப்பிடிப்புச் செலவு, தொழில்நுட்பக் குழு சம்பளம், நாயகி சம்பளம், துணை நடிகர் சம்பளம் என ஏகத்துக்கும் எகிறும். ஆனாலும், விஜய் படம் என்றால் மினிமம் கியாரண்டியைத் தாண்டி வசூல் அள்ளும். காரணம், பெண்களும், குழந்தைகளும் தரும் ஆதரவுதான். ‘துப்பாக்கி’,‘கத்தி’,‘தெறி’,‘மெர்சல்’,‘சர்கார்’,‘பிகில்’ உள்ளிட்ட விஜய்யின் பல படங்கள் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன.

அதனால்தான் ‘சுறா’, ‘ஆதி’, ‘புலி’, ‘பைரவா’ போன்ற படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்குப் பெரிய நஷ்டத்தை அளிக்கவில்லை. இதே படங்களில் வேறு ஒரு நடிகர் நடித்திருந்தால் அவ்வளவுதான். அதுதான் விஜய்யின் பலமாக உள்ளது. இப்போது விஜய்க்குத் தனிப்பட்ட ரசிகர்களைத் தாண்டி பொதுவான மக்களும் ரசிக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கேற்ப விஜய்யும் நடிப்பு முறையை, கதைக் களத்தை மாற்றிக்கொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது.

‘அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா, உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேன்டா’ என்று ‘புதிய கீதை’ படத்தில் பாடினார் விஜய். உண்மையில் வசூலில் அவர் அண்ணனை மிஞ்சும் தம்பிதான், தமிழ் சினிமாவின் தளபதிதான்.