சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான சுரங்கம் தூண்டும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.13) தொடங்கி வைத்தார்.

சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ தொலைவுக்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், உயர்மட்டப் பாதைக்காக, தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், சுரங்கப்பாதை தோண்டும் பணிக்காக 23 ராட்சதசுரங்க துளையிடும் இயந்திரங்கள் வரவழைத்து அக்டோபர் மாதம் முதல் சுரங்கம் தோன்டும் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இதில் முதற்கட்டமாக 5 இயந்திரங்கள் பல்வேறு வழிதடங்களில் சுரங்கம் தோண்டும் பணிகளில் இன்று முதல் ஈடுபட உள்ளது. மாதவரம் முதல் கெல்லிஸ் வரையிலான 9 கிமீ சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாதவரம் பகுதியில் புதிதாக அமைய உள்ள மெட்ரோ பணிகளை பார்வையிட்டு, மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப் பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் பணியை இன்று (அக்.13) துவக்கி வைக்க வைத்தார்.

30 நிலையங்களுடன் 26.7 கி.மீ. சுரங்க வழிப் பாதை கொண்ட 3 வது வழித்தடத்தில் 15 ராட்சத துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடபட்டுள்ளது. அதாவது மாதவரம் முதல் கெல்லீஸ் வரை 9 கி.மீ. தொலைவுக்கு 7 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களும், கெல்லீஸ் முதல் தரமணி வரை 8 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களும் பயன்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதேபோல் கொளத்தூர் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு 4 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களும், கலங்கரை விளக்கம் முதல் மீனாட்சி கல்லூரி வரை 10 கி.மீ தொலைவுக்கு 4 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நாதமுனி முதல் ரெட்டேரி வரை 5 கி.மீ. பாதை கடினமான பாறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நந்தனம் மற்றும் பனகல் பூங்கா இடையேயான 1.3 கி.மீ. பாதையில், பாறை மண் நிலையில் உள்ளன. இந்த பகுதிகளில் ராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம் 26 மீட்டர் ஆழத்தில் துளை அமைக்கப்படுமென மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.