கர்நாடக மாநிலம் மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில் முக்கியமானது தமிழகம், கேரளா, பாண்டிச்சேரியின் ஒப்புதல் பெற்று வரவேண்டும் என்பதே. அதை பெறாததால் அனுமதி அளிக்கமாட்டோம் என மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்ததாக துரைமுருகன் பேட்டி அளித்தார்.

கர்நாடகா மேகதாது அணைக்கட்ட எடுத்துவரும் முயற்சியை அடுத்து தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் தமிழக அனைத்துக்கட்சிக்குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

“முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சென்று டெல்லியில் இருக்கக்கூடிய நீர் பாசனத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைக்கட்டக்கூடாது என்று வற்புறுத்திவிட்ட வாருங்கள் என்று தெரிவித்தார்கள்.

அதன் அடிப்படையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இன்று வந்திருந்தார்கள். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து சுமார் 45 நிமிடத்துக்கும் மேலாக வாதங்களை எடுத்து வைத்தோம், வாதிட்டோம். இறுதியாக நாங்கள் இங்கு வந்துள்ள நோக்கத்தை தெளிவாக சொன்னோம். கர்நாடக அரசுக்கு எந்த வகையிலும் மேகதாது அணைக்கட்ட துணைப் போகக்கூடாது என்பதுதான்.

அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு திட்ட அறிக்கை தயாரிக்க இங்குள்ள மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததை சுட்டிக்காட்டினோம். மத்திய அமைச்சர் எந்த வகையிலும் மேகதாது அணை கட்ட முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது. காரணம் அவர்கள் திட்ட அறிக்கை தயாரிக்க என்னென்ன வகைகளில் நிபந்தனைகள் விதித்தோமோ அதில் எதையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

திட்ட அறிக்கை வழங்க தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும், காவேரி அத்தாரிட்டியின் முழு ஒத்துழைப்பை பெற வேண்டும், அதன்பின்னர் மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி பெற்று வர வேண்டும் இதையெல்லாம் கொண்டுவந்தால் அனுமதி தருவோம் என்று சொன்னோம்.

ஆனால் அவர்கள் அதை எதையுமே செய்யவில்லை, அவர்களாக நினைத்து அவர்களாக திட்ட அறிக்கையை தயாரித்து வந்துள்ளார்கள் அதனால் அது நடக்காது. அதனால் அவர்கள் திட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனால் கர்நாடக அரசின் திட்டம் நிறைவேறாது என்று தெரிவித்தார்.

நாங்கள் வந்தது ஒருவகையில் வெற்றி என்று சொல்வோம். நீங்கள் அனுமதி கொடுப்போம் என்று சொன்னதாக சொன்னார்களே என்று கேட்டபோது எந்த வகையிலும் நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று திட்டவட்டமாக சொல்கிறோம் என்று சொன்னார்”

இவ்வாறு துரைமுருகன் பேட்டி அளித்தார்.