சென்னை, கொல்கத்தா, டெல்லி-என்சிஆர், மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலம் (எம்எம்ஆர்), பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் நடப்பாண்டில் 3.65 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச விற்பனை அளவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2014-ம் ஆண்டில்தான் இந்த முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனையானது 3.43 லட்சம் என்ற சாதனை அளவை தொட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அந்த சாதனை விற்பனை அளவு முறியடிக்கப்பட்டுள்ளது. கடன் வட்டி அதிகரிப்புக்கிடையிலும் இது சாத்தியமாகியுள்ளது. கடந்த 2021-ல் முக்கிய 7 நகரங்களில் குடியிருப்புகள் விற்பனையானது 2,36,500-ஆக இருந்தது.

கரோனா பேரிடருக்குப் பிறகு தேவை அதிகரிப்பு மற்றும் உள்ளீட்டு செலவினங்கள் உயர்வு ஆகியவற்றின் காரணமாக குடியிருப்புகளின் விலை 4 முதல் 7 சதவீதம் வரை அதிகரித் துள்ளது.

நடப்பாண்டில் அதிகபட்சமாக எம்எம்ஆர்-ல் 1,09,733 குடியிருப்புகள் விற்பனையாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து டெல்லி-என்சிஆர் பகுதியில் வீடு விற்பனை 40,053-லிருந்து 59 சதவீதம் அதிகரித்து 63,712-ஆனது.

அதேபோன்று, புனேயில் நடப்பு ஆண்டில் வீடுகள் விற்பனையானது 35,975-லிருந்து 59 சதவீதம் உயர்ந்து 57,146-ஆகவும், பெங்களூருவில் விற்பனை 33,084-லிருந்து 50 சதவீதம் அதிகரித்து 49,478-ஆகவும், ஹைதராபாதில் 25,406-லிருந்து 87 சதவீதம் உயர்ந்து 47,487-ஆகவும் இருந்தன.

சென்னையைப் பொருத்தவரையில் குடியிருப்புகளின் விற்பனை16,097-ஆக இருந்தது. இது, முந்தைய 2021-ல் விற்பனையான 15,525 வீடு களுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகம் என அனராக் தெரிவித்துள்ளது.