புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.

முஸ்லிம் இறைத்தூதரை விமர்சித்த நுபுர் சர்மாவிற்கு ஆதரவளித்ததாக உதய்பூரில் கன்னைய்யா லால் டெனி(40) பபடுகொலை செய்யப்பட்டார். இதன் தாக்கமாக பாகிஸ்தானின் எல்லையிலுள்ள ராஜஸ்தானின் மாவட்டங்களில் சோதனைகள் நடைபெற்றன.

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கு இந்தியாவின் எல்லைப்புற பகுதிகளிலிருந்து முக்கியத் தகவல்களை அனுப்பப்படுவதாகத் தெரிந்துள்ளது. ‘ஆப்ரேஷன் சர்ஜாட்’ எனும் பெயரில் ராஜஸ்தானின் சிஐடி பிரிவும், சிறப்புப் படையினரும் இணைந்து இந்த சோதனையை நடத்தினர்.

இவை, ஜுலை 25 முதல் 28 வரையில் சுர்ரூ, கங்காநகர் மற்றும் ஹனுமன்கரில் நடைபெற்றன. அப்பகுதியில் 23 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் 3 பேர் சிக்கியுள்ளனர்.

சுர்ரூவில் அப்துல் சத்தார், சுர்ரூவின் நிதின் யாதவ் மற்றும் ஹனுமன்கரில் ராம் சிங் ஆகியோர் கைதாகி உள்ளனர். இவர்களில் பழவியாபாரம் செய்யும் நிதின் யாதவ், பாகிஸ்தானின் பெண் உளவாளி வலையில் முகநூல் வழியாக சிக்கியுள்ளார்.

பார்மரின் தொழிற்சாலையில் பணியாற்றும் ராம் சிங், இந்தியாவின் முக்கியப் புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். இதே செயலை செய்த அல்ந்துல் சுர்ரூ உள்ளிட்ட மூவரும் தவற்றை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்காக மூவரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூவருமே சமூகவலைதளங்கள் மூலமாகவே பாகிஸ்தானுக்கு தகவல்களை பறிமாறி உள்ளனர்.