திருப்பூர்: “30 சதவீதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தினால், எங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நிலைதான் வரும்” என்று கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் பொதுக்குழுவில் வேதனையுடன் பேசப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே கோம்பக்காட்டுபுதூரில் இன்று நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் ச.ஈ.பூபதி ஆகிய நிர்வாகிகள் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு அறிவித்துள்ள 30 சதவீத மின் கட்டண உயர்வு என்பது, விசைத்தறியில் அனைத்து சிலாப்புகளுக்கும் 30 சதவீத மின் கட்டண உயர்வாகும். இது விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பேரிடியாகவும் உள்ளது. ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.40 பைசா உயர்வு என்பது, ஒவ்வொரு விசைத்தறியாளருக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

கூலிக்கு நெசவு செய்யும் எங்களால் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது. அரசு சாதா விசைத்தறி 3 ஏ-2க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். அரசும் மின்வாரியமும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், சாதா விசைத்தறிக்கு, கட்டணத்தை உயர்த்தினால் கட்டண உயர்வை எந்த வகையிலும் செலுத்த இயலாது.

விசைத்தறிகளை நிறுத்தி போராடுவதை தவிர வேறு வழியில்லை. தமிழக அரசு, எங்கள் கஷ்டங்களை உணர்ந்து, முழுமையாக கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வரும் 16-ம் தேதி கோவை எஸ்என்ஆர் கல்லூரியில் நடைபெறும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் குடும்பத்தோடு கட்டாயம் பங்கேற்று, தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

மத்திய அரசின் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் நிச்சயம் நலிவடையும். மின்சார திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது. ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்துவது என்பது, நிரந்தர வருமானமில்லாத விசைத்தறி தொழிலும் சிறு, குறு தொழில்கள் அனைத்துக்கும் கடுமையான பொருளாதார சுமையாக மாறி தொழில்கள் அழிந்துவிடும்.

தமிழக அரசு, ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்துவதற்கு அனுமதிக்ககூடாது. தமிழக அரசு இலவச, வேஷ்டி சேலை, சீருடை ரகங்களை விசைத்தறிகளுக்கு கொடுத்து உதவ வேண்டும். மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் உள்ளிட்டோருக்கு அனைத்து விசைத்தறியாளர்களும், பதிவு அஞ்சல் அனுப்புவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி, “1994-ம் ஆண்டு பிறகு, மின் கட்டணத்தை உயர்த்தினால் தொழில் நடக்காது என்பது அரசுக்கும் தெரியும். இங்குள்ள விசைத்தறி உரிமையாளர்களுக்கும் தெரியும். 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஒட்டுமொத்தமாக மின் கட்டணத்தை உயர்த்தி தொழிலை சீரழித்தனர். தற்போது, அனைத்து சிலாப்புகளுக்கும் 30 சதவீதம் உயர்த்தினால் இனி சிலாப் முறை தேவையில்லை. தேர்தல்களில் சலுகைகளை அறிவித்துக் கொண்டிருந்த அரசு, தற்போது திடீரென விசைத் தறியாளர்களை கைவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தினால், எங்களால் பிழைப்பு நடத்த முடியாது. 30 சதவீதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தினால், எங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை தான் வரும். 1990-ம் ஆண்டுவாக்கில் நடந்த போராட்டத்தை போல் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். அது போன்று போராட்டம் நடந்தால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரும் மாண்டுவிடுவோம் என்பதை தமிழக அரசுக்கும், முதல்வருக்கு சொல்லிக்கொள்கிறோம்” என்று பழனிசாமி கூறினார்.