அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பெயர் சர்தார் படேல் மைதானம் என மாற்றப்படும் என்று குஜராத் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தேர்தல் அறிக்கை, அரசு ஆவணமாக அங்கீகாரம் பெறும் என தெரிவித்தார்.

கடந்த 27 ஆண்டு கால பாஜக ஆட்சியில் குஜராத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய கெலாட், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். காங்கிரஸ் வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:

  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் பெயர், சர்தார் படேல் மைதானம் என பெயர் மாற்றப்படும்.
  • குஜராத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • தனியாக வசிக்கும் பெண்கள், விதவைகள், வயதான பெண்கள் ஆகியோருக்கு மாதம்தோறும் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் ஆங்கில வழிப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
  • உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.
  • ரூ.3 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  • 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
  • வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ. 500 மானியம் வழங்கப்படும்.
  • ரூ.10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
  • கரோனா கால நிவாரணமாக ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.