சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் அன்னை வேளாங்கண்ணி குழுமம் மற்றும் இயற்கை மக்கள் சேவை மையம் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன் “தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சென்னையில் 99 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 87% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சென்னையின் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவதில்லை. எனவே கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

 

 

 

சென்னையில் 1,300 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும். சரியாக பணியாற்றாத மழைநீர் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை பாயும்” என்று கூறினார்.