தமிழகத்தில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் பெட்டகங்கள் வழங்கினார்.இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறார்.  தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் பரவலை தடுக்க உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பருவ மழை தொடங்க உள்ளதால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியுடன் ஒப்பீடு கையில், அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் கடந்த 5 மாதங்களில் ஒரே ஒரு சம்பவம் மட்டும் நடந்துள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டனர். தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப் புற செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, மண்டபம் முகாம் அரசு மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்