உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் கடந்த ஆண்டு நவம்பரில் அதன் அதிகபட்ச உச்ச விலையை ஒப்பிடுகையில் தற்போது 50% குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் 130 டாலர் வரையில் உயர்ந்தது. அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை தொடர்ந்து உயருகிறது.
இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.
இதனால் ரூபாயின் மதிப்பானது சரிவடைந்து வருகிறது. இன்று காலை தொடக்கம் முதலே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 77.42 ரூபாய் வரையில் சரிவு கண்டது.
உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்ததால், டிஜிட்டல் சொத்துக்களின் மதிப்பு சரிவடைந்துள்ளது. பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி காயின்களின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று 7.39% குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
அதிர்வு கண்ட கிரிப்டோகரன்சி
கிரிப்டோ மார்க்கெட்டில் முன்னணி காயினான பிட்காயினின் விலையானது 8.36% சரிந்து 36,000 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. அடுத்த காயினான எதிரியமும் 6.62% சரிந்து 2,700 டாலருக்கு வர்த்தமாகி வருகிறது.
ஆல்ட்காயின்கள் சரிவுடனே காணப்படுகின்றன. கிரிப்டோவில் முதன்மைக் காயினான பிட்காயின் 8.36 சதவீதமும், எதிரியம் 6.63 சதவீதமும், பைனான்ஸ் 6.06 சதவீதமாகவும் குறைந்துள்ளன.
ஆல்ட்காயின்களான டெராகாயின் 7.20 சதவீதமும், ஷிபாஇனு 7.03 சதவீதமும், சொலானா 11.84 சதவீதமும் மற்றும் அவலாஞ்சி 14.27 சதவீதம் சரிந்தன. டோஜ்காயின் 5.33 சதவீதமும், எக்ஸ்.ஆர்.பிகாயின் 6.07 சதவீதம் சரிந்தன.
கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின்படி, வார இறுதியில் விக்கிப்பீடியாவின் மதிப்பு $34,000 க்குக் கீழே சரிந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சியான எத்ரியம் மதிப்பும் கடந்த வாரத்தில் 10%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
பிட்காயின் கிரிப்டோகரன்சி சந்தையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது, மொத்த மதிப்பு 640 பில்லியன் டாலராகும். சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கடந்த ஆண்டு நவம்பரில் அதன் உச்சத்தில் இருந்து இப்போது 50% குறைந்துள்ளது.
தொழில்துறை வட்டாரங்களின் தகவல்படி ‘‘மந்தமான உலகப் பொருளாதாரத்தின் எதிர்பார்ப்பு, உயரும் வட்டி விகிதங்கள், பணவீக்க கவலைகள், உலகளாவிய பொருளாதார நெருக்கடி போன்றவை காரணமாக பிட்காயின் விலை கடுமையாக குறைந்துள்ளது.
இதுகுறித்து ஜியோட்டஸ் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் சுப்புராஜ் கூறுகையில், ‘‘வட்டி விகித உயர்வு மற்றும் உலகளாவிய பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியானதால் எதிர்மறையான உணர்வு முதலீட்டாள்களை ஆட்டிப்படைக்கிறது. இதனால் பிட்காயின் உட்பட கிரிப்டோ நாணயம் பாதிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.
இதுமட்டுமின்றி 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்தை முழு வீச்சில் இருந்தபோது, கிரிப்டோ சொத்துக்களின் மொத்த சந்தை மூலதனம் 50 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளது. 3.15 டிரில்லியன் டாலரில் இருந்து 1.51 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது.