இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 50 சதவீத மக்கள் தங்கள் செலவுகளைக் குறைத்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவில் முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 107 ரூபாய். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் சாமானிய மக்களின் வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ‘எரிபொருள் விலை உயர்வின் காரணமாக இரண்டில் ஒருவர் 2021-ம் ஆண்டு தங்களது செலவைக் குறைத்துள்ளனர். அதேநேரத்தில் ஐந்தில் ஒருவர் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதைக் குறைத்துள்ளனர். இந்த ஆய்வில் ஏழு பேரில் ஒருவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களுடைய சேமிப்பு குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் 50 சதவீதம் பேர் தங்களுடைய செலவைக் குறைத்துள்ளனர். இந்தியாவில் 14 சதவீதம் பேர் சேமிப்பைக் குறைத்துள்ளனர். 21 சதவீதம் பேர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களுடைய அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படும் பொருள்களில் முதன்மையானது எரிபொருள்கள். ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்படாத பெட்ரோல், டீசல் மீது 200 சதவீத வரிவரை விதிக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடத்தில் பெட்ரோல் விலை சுமார் 31 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது.