மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப துறையின் புரட்சியாக கருதப்படும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கறை ஏலம் விடப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன அதிகபட்சமாக 14 பில்லியன் டாலர் வரை ஏலத் தொகை கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ அதிகளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பானியா, அதானியா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடட் ஏலத்துக்கு முன்னர் வசூலிக்கப்படும் வைப்புத் தொகையான ப்ரீ ஆக்சன் டெபாசிட்டை மிக அதிகமான அளவில் செலுத்தியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனம் தான் ஏலத்தில் பெருந்தொகை குறிப்பிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் ஏலத்தில் ஆச்சர்யம் தரும் என்ட்ரி கொடுத்தது அதானி நிறுவனம். 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக இருக்கும் திட்டங்களை அதானி வெளியிட்டுள்ளார். இதனால் இந்த ஏலத்தில் அதானியின் கை ஓங்கி இருக்கும் என்று கருதப்படுகிறது.

பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா லிமிடட் ஆகிய நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டின் முற்பகுதியில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை அதானி முந்தினார். இதனால், இந்த ஏலத்தை வெல்வதை மிகப்பெரிய இலக்காக கொண்டுள்ளது அதானி குழுமம். அதேவேளையில் முன்பணம் வைப்புத் தொகையை அதிகமாக செலுத்தியுள்ளதால் ஏலத்தையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது அம்பானியின் ரிலையன்ஸ். அதானி டேட்டா குழுமம் வெறும் 1 பில்லியன் டாலரை மட்டுமே முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது.

5ஜி சேவை அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரத்தில் கூடுதலாக 45,000 கோடி டாலர் புழங்கும். இதையடுத்து வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அதிவேக இணையதள வசதியை வழங்கும்.