ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிக்கு (இபிஎப்ஓ) 2020-21-ம் நிதி ஆண்டுக்கான 8.5 சதவீத வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் சேரும் எனத் தெரிகிறது.

பிஎஃப் முதலீட்டுக்கான வட்டித் தொகையை செலுத்த உள்ளதால் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர்.

2020-21-ம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தில் (8.5%) எவ்விதமாறுதலும் செய்யப்படவில்லை. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களது பிஎஃப் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். மிக அதிக அளவிலானோர் தங்களது சேமிப்பை எடுத்துவிட்டதால் வட்டி விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019-20-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வட்டி விகிதம் 8.50 ஆகக் குறைக்கப்பட்டது. இது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட வட்டிவிகிதத்தை விட குறைவாகும்.

கரோனா வைரஸ் பரவலால்ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து திரும்ப செலுத்த வேண்டியிராத தொகையை முன்பணமாக பெற அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி தங்களது சேமிப்பில் 75 சதவீதஅளவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டது. இபிஎஃப்ஓ-வில்பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 7.56 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.