எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டுக்கான 7,254 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் 7,825 எம்பிபிஎஸ், 2,060 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில், அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு 886 இடங்களும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,169 எம்பிபிஎஸ், 573 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 5,800 எம்பிபிஎஸ், 1,457 பிடிஎஸ் என மொத்தம் 7,257 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. இவற்றுக்கான முதல்கட்ட கலந்தாய்வில், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 3 பிடிஎஸ் இடங்களைத் தவிர்த்து, 7,254 இடங்கள் நிரம்பியுள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வேலுார் சிஎம்சி கல்லூரி

மருத்துவ தேர்வுக் குழுச் செயலர் வசந்தாமணி கூறும்போது, “வேலுார் சிஎம்சி மருத்துவக் கல்லுாரியில் 100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி 70 இடங்களை மருத்துவக் கல்வி இயக்ககமும், 30 இடங்களை அந்த நிர்வாகமும் நிரப்பிக் கொள்ளும். 70 இடங்களுக்கு கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டு, அதற்கான தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெறாத கிறிஸ்தவர்கள் வரும் 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் scugdocuments@gmail.com என்ற இ-மெயிலுக்கு விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.