“ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்பப் பெற வேண்டும். தனியார் வாகனங்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. காவல் துறை அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு நிற கூலிங் பிலிம் ஒட்டக் கூடாது’ என்று ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், 19 ஆர்டர்லிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளனர். சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மாநாட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

“நாம் ராஜா ராணி இல்லை நாட்டின் குடிமக்கள்தான் ராஜா, ராணிகள். நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள். இந்த விவகாரத்தில் முதன்மைச் செயலாளர் முறையாக செயல்பட வேண்டும்.வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது, அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவல்துறைக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது. 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்றும் வேதனை தெரிவித்தார்.

அரசுக் குடியிருப்புகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த எம்.பி.,க்களை காலி செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வேளையில், இங்கு சீருடை அணிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக காவலர் குடியிருப்பில் தங்கியிருப்பதை தடுக்க முடியவில்லை.

ஆர்டர்லிகளாக உள்ளவர்கள் இது குறித்து எதுவும் பேசமாட்டார்கள்.ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும். ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை. ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மை செயலாளாரின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும்.

ஆர்டர்லிகளை திரும்ப ஒப்படைப்பதில் உயர் அதிகாரிகளுக்கு சிரமம் இருக்கும்தான், அதேநேரம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.எனவே அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என்றார்.

பின்னர், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல்துறை தரப்பில், ” காவல்துறை சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவது, புகார்களில் நடவடிக்கை என செயல்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு 24 மணி நேரம் கூட போதவில்லை. முகாம் அலுவலகத்தில் இருக்கும் காவலர்களை ஒழுங்குபடுத்தி வருவதாகவும், இந்தாண்டு மட்டும் 1000 காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேர ரோந்து பணியிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது. மேலும் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஆர்டர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உள்ளது” என்றார்.

இந்த வழக்கில் காவல்துறை டிஜிபியை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி, ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.