சுதந்திரப் போராட்டத்தின் 75-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி செயல்படுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்குழுவினர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களோடு கலந்து பேசி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டங்கள் எங்கெல்லாம் நடைபெற்றதோ, அங்கே விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் மீண்டும் சுதந்திரப் போராட்ட உணர்வை நினைவுகூர்கிற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
சுதந்திரப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த தமிழகத்தில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இக்குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.