டெல்லி: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று  அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் தேசிய கொடியை ஏற்றினர்.

இந்தியாவின், 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட, நாடு முழவுதும் தயாராகிவருகிறது. அமுத பெருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘வீடுகள் தோறும் மூவர்ணம்’ என்ற பிரதமர் நரேந்திர மோடி வலிறுத்தினார். அதை செயல்படுத்தும்படி, மாநிலங்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதற்காக பொது மக்களுக்கு தேசிய கொடிகள் விநியோகிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை ஏற்று அரசியல் கட்சி நிர்வாகிகள், நடிகர்கள், பொதுமக்கள் என பலர் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர். நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர்.  ஏராளமானோர், தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது மனைவியுடன் இணைந்து டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர், மோடியின் அழைப்பை ஏற்று மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், பனாஜியில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார். இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் எல்லை பகுதியில் தேசிய கொடி ஏற்றினர். சீன எல்லையோரத்தில் வசிக்கும் மக்களிடையே, நாட்டு பற்றை ஏற்படுத்தும் வகையில் தேசிய கொடி ஏற்றியதுடன், தேசபக்தி பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் நேற்று தேசியக்கொடியை ஏற்றினார். கேரள நடிகர் மோகன்லால், கொச்சியில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர், வீடு தோறும் மூவர்ணம் என்ற பிரதமரின் அழைப்பை மதித்து மக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். இந்த அமுத விழா, மக்களிடம் தைரியத்தையம், தேசபக்தியுடன் முன்னேற நம்மை ஊக்குவிக்கட்டும் என்றார்.