ஐஎஸ்எஸ்: நாடு 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. இத்தாலிய விண்வெளி வீராங்கணை சமந்தா கிறிஸ்டஃப்ரோட்டி விண்வெளியில் இருந்து ஒரு வாழ்த்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இத்தாலிய விண்வெளி முகமை (ஐஎஸ்ஏ), அமெரிக்க விண்வெளி மையம் நாசா இன்னும் பல சர்வதேச கூட்டாளிகள் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு வாழ்த்து கூறுகிறேன். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வாழ்துகளைப் பகிர்கிறேன்.

பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் இஸ்ரோவுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ ஆயத்தமாகும் சூழலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்திய வீடியோவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்ஜித் சிங் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையாக அறியப்படும் விக்ரம் ஏ சாராபாயின் பிறந்தநாளில் அவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது