‘தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டிகளில் பங்கேற்ற ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்’ என்று ஈஷா அறக்கட்டளை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய பாரம்பரிய கலைகளில் களரிப் பயட்டு ஒரு முக்கிய கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப் பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

8-medals-for-Isha-students-in-national-level-Kalari-competitions

அதன்படி, 2020-21-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டிகளின் முடிவில், மெய்பயட்டு பிரிவில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர் சீனிவாசன் தங்கப் பதக்கமும், பத்மேஷ் ராஜ் வெள்ளிப் பதக்கமும், அரவமுதன் மற்றும் மாணவிகள் அக்‌ஷயா, வினோதினி ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்களும் வென்றனர். உரிமி பிரிவில் மாணவர் பிரசன்னா வெள்ளிப் பதக்கமும், கெட்டுகரி பிரிவில் சீனிவாசன் மற்றும் லோகேஷ் வெண்கலப் பதக்கங்களும் வென்றனர். சுவாடு பிரிவில் இன்ப தமிழன் வெண்கலம்ப் பதக்கமும் வென்றார். இதன்மூலம், ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கோவையில் உள்ள ஈஷா சம்ஸ்க்ரிதியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இசை, நடனம், யோகா ஆகியவற்றுடன் சேர்த்து சாகச கலையான களரியும் கடந்த 13 வருடங்களாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.