பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால் தனது தந்தையுடன் இணைந்து ஆழ்கடலில் தூய்மைப் பணியில் 8 வயதுச் சிறுமி தாரகை ஆரண்ணா ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த். சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சிப் பள்ளி நடத்தும் இவர் உரிய பயிற்சிகளுடன் ஆழ்கடலுக்குள் சுற்றுலாப் பயணிகளையும், வீரர்களையும் அழைத்துச் செல்கிறார். கரோனா காலச் சூழலில் கடல் தூய்மை, யோகா, உடல் ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆழ்கடலில் செய்துள்ளார்.

அவரது 8 வயது மகள் தாரகை ஆரண்ணா, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட ஆழ்கடலில் தூய்மைப் பணி செய்கிறார். இதை அவரது தந்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றிச் சிறுமி தாரகை ஆரண்ணா கூறுகையில், “சிறு வயதிலேயே நீச்சல் அடிக்கத் தொடங்கிவிட்டேன். பிறந்த 3 நாளில் இருந்து தண்ணீரில் இருக்கத் தொடங்கினேன் என்று வீட்டில் சொல்வார்கள். மூன்று வயதிலேயே நான் நன்றாக நீச்சலடிப்பேன். அப்பா ஆழ்டல் நீச்சல் பயிற்சி அளிப்பதால் நானும் பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். நீச்சல் குளம், கடலில் பயிற்சி எடுத்து வந்தேன். அங்கெல்லாம் பிளாஸ்டிக் பரவிக் கிடப்பது எனக்குப் பிடிக்காது. காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது கடற்கரையில் பிளாஸ்டிக் இருந்தால் அதைச் சேகரித்துவிடுவேன்.

ஆழ்கடல் நீச்சலுக்கு அப்பா போகும்போது அங்கு கிடக்கும் பிளாஸ்டிக், அறுந்த வலை, முகக்கவசங்கள் போன்றவற்றை எடுத்து வருவார். கடலில் இவை இருப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கும். அதனால் இப்போது நானும் ஆழ்கடலில் தூய்மைப் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளேன்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் தவிர்க்கலாம். நாம் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி நம்மைச் சுற்றியுள்ள பகுதியைத் தூய்மையாக்கினாலே அனைவருக்கும் பெரிய பலன் கிடைக்கும். முக்கியமாக நாமே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க, கடைக்குத் துணிப்பையை எடுத்துச் செல்வதிலிருந்து நம் வாழ்க்கை முறையை மாற்றலாம்” என்று தெரிவித்தார்.