தமிழக அரசின் 3,346 அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில், “கடந்த ஆண்டு 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன், விழாக்களில் கலந்து கொண்டேன் என்றால் அதன் மூலமாக பயனடைந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பயனடைந்துள்ளார்கள்.

அதாவது ஒரு கோடிப் பேருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்தவர்கள் இவர்கள். மொத்தமுள்ள மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் நலத் திட்ட விழாக்கள் நடந்துள்ளன.

முடிவுற்ற மொத்தப் பணிகள் 7 ஆயிரத்து 430; இதன் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஆகும். இதுவரை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்பட்ட மொத்தப் பணிகள் 13 ஆயிரத்து 428; இதன் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஆகும். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்கீழ், தமிழ்நாடு முழுவதும் இதுவரை அனைத்து அரசுத் துறைகளின் சார்பிலும் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக அரசு எந்தளவுக்கு வேகத்துடன் செயல்படுகிறது என்பதை அறியலாம்.

இந்த அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு அறிவிப்புகளைச் செய்துள்ளது. அதாவது, ஆளுநர் உரை அறிவிப்புகள் – 75, என்னால் சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் – 67, மாவட்ட விழாக்களில் செய்த அறிவிப்புகள் – 88, மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு அறிவிப்புகள் – 5, செய்தி வெளியீடு அறிவிப்புகள் – 154, நிதிநிலைஅறிக்கை – 254, வேளாண்மை நிதிநிலை அறிக்கை – 237, அமைச்சர்கள் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் – 2424, இதர அறிவிப்புகள் – 42 என இதுவரை மொத்தம் 3,346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 86 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

அதாவது 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை, அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 852 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2,040 பணிகள் நடைபெற்று வருகின்றன. 422 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 32 அறிவிப்புகள் குறித்த கருத்துருக்கள் ஒன்றிய அரசினுடைய பரிசீலனையில் உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டில் எப்படி வளர்ச்சி அடைந்தோம் என்றால், சொன்னதைச் செய்தோம் அதனால் வளர்ந்துள்ளோம். அதுதான் உண்மை” என்று முதல்வர் பேசினார்.