குமரியை சேர்ந்த 9 வயது சிறுவன் கண்ணை கட்டியவாறு பியானோ வாசித்து கேட்பவர்களை வியக்க வைக்கிறார். அவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் வெளிநாட்டு இசைக் குழுவினர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்தவர் ராஜசெல்வம். இவரது மனைவி மெல்பின். இவர்களது 9 வயது மகன் ஆர்.தரண்ராஜ். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறார். யுகேஜி படிக்கும்போதே இசைக்கருவிகளை இசைக்க ஆர்வம் காட்டிய சிறுவன் தரண்ராஜை அவரது தாயார் மெல்பின் ஊக்கப்படுத்தியுள்ளார்.

பாடல்களை கேட்டும், ஆன்லைன் மூலம் இசை மெட்டுகளை அறிந்தும் பியானோ வாசித்த தரண்ராஜ், நாளடைவில் தனது பள்ளி விழாக்களில் பியானோ வாசித்துள்ளார். சிறுவனின் திறமையை பார்த்து வியந்த ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தியுள்ளனர்.

தற்போது இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அதிகம் இசைத்து வரும் தரண்ராஜ் இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தான் படிக்கும் பள்ளியில் அமெரிக்கன் மியூசிக் அமைப்பு கடந்த மாதம் நடத்திய திறன் நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு மத்தியில் தரண்ராஜ் கண்ணை கட்டிக் கொண்டு அரை மணி நேரம் அபாரமாக பியானோ வாசித்தார்.

இதை பார்த்து ஆச்சரியமடைந்த நடுவர்கள் அவரை பாராட்டினர். யுடியூப், பேஸ்புக்கில் தரண் ராஜ் மேற்கத்திய பாடல்களை பியானோ மூலம் நேர்த்தியாக வாசித்ததை பார்த்த அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பல வெளிநாட்டு இசை குழுவினர் அவரை, சிறந்த குழந்தைகள் திறமையாளராக தேர்வு செய்து பாராட்டியுள்ளனர். இவர் வயலின் மற்றும் பிற இசை கருவிகளையும் திறம்பட இசைத்து வருகிறார்.

இதுகுறித்து தரண்ராஜ் கூறும்போது, ‘படிப்புடன் இசை கருவிகளை இசைப்பது எனக்கு பிடிக்கும். எனது பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது முறைப்படி பியானோ மற்றும் இசைக்கருவிகளை கையாள கற்று வருகிறேன். முயற்சி செய்து பார்க்கலாம் என கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்தேன். முதலில் கீ போர்டை நைலான் துணியால் மூடிக்கொண்டு வாசிப்பதற்கு முயற்சி எடுத்தேன். தொடர்ந்து இசை கருவிகளை பலவகைகளில் இசைக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

தற்போது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களும் நான் பியானோ இசைப்பதை பார்த்து பாராட்டு தெரிவித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் சிறப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது ’’ என்றார்.