வீட்டுக் கடன் மற்றும் அடகு வைக்கும் வசதியை ஏற்படுத்தித் தரும் பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கடந்த வாரம் தனது ஊழியர்களுடனான கலந்துரையாடலின்போது 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விஷால் கார்க், நியூயார்க் நகரில் செயல்படும் பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஆட் குறைப்பு நடவடிக்கையாக 900 பணியாளர்களை ஜூம் அழைப்பின்போதே பணி நீக்கம்செய்து ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 9 சதவீதமாகும்.

வீடு அடகு வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்நிறுவனம் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்கிறது.

சிஇஓ விஷால் கார்க் ஜூம்அழைப்பின் மூலம் பணியாளர் களுடன் கலந்தாலோசிக்கும் நிகழ்வை ஒரு பணியாளர் மறைமுகமாக வீடியோ படமெடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தொடங்கும் முன்பாக பணியாளர்களை பணி நீக்கம் செய்த விஷால் கார்க்கின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

3 நிமிஷம் நடைபெற்ற இந்த உரையாடலில் 900 பணியாளர்களை பணி நீக்கம் செய்வது என்பது மிகவும் சவாலான பணியாக இருந்ததாக விஷால் கார்க் ஊடகங் களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனது பணிக் காலத்தில் இதுபோன்று ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை இரண்டாவது முறையாக எடுத்துள்ளதாகவும், பொதுவாக இதை தான் விரும்புவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 15 சதவீத அளவுக்கு ஆட் குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. சந்தை நிலவரம், பணியாளர்களின் செயல்பாடு ஆகிய ஒவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஆள்குறைப்பு 15 சதவீதமாக இருந்தபோதிலும் தற்போது 9 சதவீத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவ னத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.