’96’ படத்தின் கூட்டணியான விஜய் சேதுபதி – பிரேம் குமார் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் பணிபுரியவுள்ளார்கள்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்துக்காக கோவிந்த் வசந்தா உருவாக்கிய பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இப்போதும் இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், தமிழில் பெற்ற வெற்றி அளவுக்கு இதர மொழிகளில் வெற்றி பெறவில்லை.
இதனிடையே, தற்போது பிரேம் குமார் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். இதிலும் விஜய் சேதுபதியே நாயகனாக நடிக்கவுள்ளார். நெருங்கிய நண்பர்களான இருவரும் இது தொடர்பாகப் பேசியுள்ளனர். தான் ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாரா அல்லது இடையிலேயே தேதிகள் ஒதுக்கி நடிக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும்.