திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராசன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களது மூத்த மகன் மாதவ்(14), திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இளம் வயது முதலே கணினியில் அதிக ஆர்வம் உள்ள இவர், தனது ஓய்வு நேரத்தைக் கூட கணினியில் ஏதாவது ஒரு பயிற்சி மேற்கொள்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்த மாதவ், ஆன்லைன் மூலமாக ஜாவா, சி, சி பிளஸ் பிளஸ், பைத்தான் போன்ற கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை முடித்துள்ளார். அப்போது கணினியின் சிபியுவானது பெரிய அளவில் உள்ளதால், அதனை கையடக்க அளவிலும், மிகக்குறைந்த விலையிலும் தயாரிக்க திட்டமிட்டார்.

இதற்காக ஒருவடிவமைப்பை செய்து அதற்குரிய பாகங்களை வழங்கும்படி கேட்டு தனியார் கணினி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பினார். அதன்படி,அதற்கான பாகங்களை மும்பையில் இருந்த தனியார் நிறுவனம்ஒன்று வழங்கியது. அவற்றைக்கொண்டு கையடக்க சிபியுவை மாதவ் தயாரித்துள்ளார்.

இதன் எடை 200 கிராம் மட்டுமே. 64 ஜி.பி-வரை தகவல்களை சேமிக்க முடியும். இந்த சிபியுவை தனது வீட்டில் உள்ள எல்இடி டிவியுடன் இணைத்து, தற்போது கம்ப்யூட்டராக பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்து தகவலறிந்த பல்வேறு கணினி நிறுவனங்கள் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து மாதவ் கூறியதாவது: நான் 4 மாதங்களாக தீவிர முயற்சி செய்து இந்த கையடக்க சிபியுவை உருவாக்கியுள்ளேன். இதற்கு ரூ.6,500 செலவானது. இதன் நோக்கம், அனைவரும் எங்கும் எளிதில் கணினியை எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டும் என்பதுதான். மேலும், இதனை வீட்டில் உள்ள சாதாரண டிவியுடன் கூட இணைத்து மானிட்டராக பயன்படுத்தலாம். அடுத்த முயற்சியாக பென்டிரைவ் அளவில் ஒரு சிபியு தயாரித்து அதனை பயன்பாட்டுக்குகொண்டுவர திட்டமிட்டுள்ளேன். எதிர்காலத்தில் கணினி தொடர்பான பொறியியல் ஆராய்ச்சி படிப்பும் மேற்கொள்ள உள்ளேன் என்றார்.